search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேட் கீப்பர்"

    ஓமலூர் அருகே ரெயில்வே கேட்டை திறக்காததால் கேட் கீப்பரை தாக்கி முதுகில் கடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓமலூர்:

    சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக மேட்டூருக்கு செல்ல ரெயில் பாதை உள்ளது.

    இந்த ரெயில் பாதையில் பயணிகள் ரெயில், அனல் மின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி ஏற்றி செல்லும் ரெயில்கள் என ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது.

    இந்த வழித்தடத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே கிராசிங் உள்ளது. இதில் ஓமலூர் அருகே உள்ள மாணத்தால் என்ற இடத்தில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் சந்திரசேகரன் என்பவர் ரெயில்வே கேட் கீப்பராக நேற்று பணியில் இருந்தார்.

    இந்த நிலையில் சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்காக மாணத்தால் ரெயில்வே கேட் நேற்று மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குடிபோதையில் இருந்த 3 பேர் கும்பல் கேட்டை திறக்குமாறு கேட் கீப்பரிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ரெயில் மிக அருகில் வந்து விட்டதால் ரயில்வே கேட்டை திறக்க முடியாது என கேட் கீப்பர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கேட் கீப்பரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.



    மேலும் அந்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென கேட் கீப்பரின் முதுகில் கடித்தார். பின்னர் சிக்னல்களுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனல் போர்டையும் அந்த கும்பல் உடைத்ததால் ரெயில்வே சிக்னல்கள் செயல் இழந்தன.

    இதனால் சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கேட் கீப்பரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த கேட் கீப்பரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சேலத்தில் இருந்து சென்ற ரெயில்வே பொறியாளர்கள் சிக்னல்களை சரி செய்தனர். தொடர்ந்து ரெயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டது. இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. #tamilnews
    ×